இளமைக் காலமும் கல்வியும்

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டம், விஷ்ணம் பேட்டையில் திரு. அருணாசலம் ஐயர், திருமதி லட்சுமியம்மாள் தம்பதியரின் எட்டு குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாக, 1890-ம் ஆண்டு மே மாதம் 16-ம் நாள், (16-05-1890) வைத்தியநாத ஐயர் பிறந்தார்.

அருணாசலம் ஐயருக்குப் புதுக்கோட்டை மகாராஜாவின் பள்ளிக்கூடத்தில் கணித ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்ததால் முதலில் குடும்பத்துடன் புதுக்கோட்டைக்குக் குடிபெயர்ந்தார். பிறகு, பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், மதுரையில் குடியேறினார்.

வைத்தியநாத ஐயர், மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தார், பள்ளியில் சிறந்த மாணவராகவும், ஆசிரியர்களின் அன்பிற்குரியவராகவும் விளங்கினார். 1909-ம் ஆண்டு SSLC தேர்வில் மாகாணத்தில் இரண்டாவதாகவும், கணிதப் பாடத்தில் முதலிடத்தையும் பெற்று வெற்றி அடைந்தார். பள்ளி நிர்வாகம் அவருக்குத் தங்கப் பதக்கம் கொடுத்துச் சிறப்பித்தது.

பின்னர், மதுரைக்கல்லூரியில், FA படித்து, மாகாணத்தில் நான்காமிடத்தையும், கணிதத்தில் முதலிடத்தையும் பெற்றுத் தேர்ச்சி அடைந்தார். கல்லூரியில் நீலகண்டசாஸ்திரியின் தங்கப்பதக்கமும், ஃபிஷர் (Fisher) தங்கப்பதக்கமும் ஐயருக்கு வழங்கப்பட்டன.

தொடர்ந்து சென்னை மாநிலக்கல்லூரியில் BA வகுப்பில் சேர்ந்தார். 1914-ம் ஆண்டு BA படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பிஷப் ஹீபர் (Bishop Heber) உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக ஓராண்டு காலமும், பின்னர், மசூலிப்பட்டினம் ஹிந்து உயர்நிலைப்பள்ளியில் ஓராண்டு காலம் கணித ஆசிரியராகவும் பணியாற்றினார்.

அச்சமயத்தில் அவர் தனிப்பட்ட முறையில் வக்கீல் படிப்பு படிக்கலானார். அதனையொட்டி அரசாங்கம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று, பிளீடர் (Pleader) அந்தஸ்தைப் பெற்றார்.

இடையில் EA தேர்வு முடிந்தவுடன் ஐயருக்கு 18 வயதாகிய போது ஒன்பது வயதாகிய அகிலாண்டம்மாளை, அவர்தம் பெற்றோர்கள் அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர்.அன்றுதொட்டு இறுதிவரை அகிலாண்டம்மாள், ஐயருக்கு ஏற்ற துணைவியாகத் திகழ்ந்தார்.



 

வக்கீல் வைத்தியநாத ஐயர்

ஐயர், வக்கீல் தொழிலுக்குத் தகுதியடைந்த வேளையில், மதுரையில் பிரபலமான வக்கீலாகத் திகழ்ந்த திரு. நடேச ஐயரிடம் ஜுனியராகச் சேர்ந்தார். ஒரு வருடம் கழிந்த உடனேயே அவர் வைத்தியநாத ஐயரின் திறமையை அறிந்து,“நீ நல்ல அறிவாளி, உழைப்பாளி, எந்த உதவியும் உனக்குத் தேவையில்லை.” என்று கூறி ஒரு பவுன் வெகுமதியும் வழங்கி அனுப்பிவிட்டார். இருப்பினும், ஐயர், நடேச ஐயருடன் நீடித்த தொடர்பு வைத்திருந்தார். நடேச ஐயரும், வைத்தியநாத ஐயரைத் தன் சொந்த மகனாகவே கருதி, அன்புடன் நடத்தி வந்தார்.

வக்கீல் தொழிலைத் தனியாக மேற்கொண்ட ஐயர், மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலி நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தி வந்தார். தனது கட்சிக்காரர்களிடம் நேர்மையாக நடந்து,அவர்கள் தேவைகளையும், விண்ணப்பங்களையும் கஷ்டநஷ்டங்களையும் நன்கு கேட்டறிந்து உண்மையான வழக்குகளை மட்டுமே எடுத்துக் கொள்வார். கட்சிக்காரர்களுக்குக் காலவிரயம், பணவிரயம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வார்.

ஐயரின் வாதத்திறமையும், அதில் பொதிந்து கிடக்கும் சட்டக் கூறுகளும் பலசமயங்களில் நீதிபதிகளை வியப்பில் ஆழ்த்தி, அவர்தம் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளன. இதனால் அவர் புகழ் பரவத்தொடங்கி வழக்குகள் குவியத் தொடங்கின. வருமானமும் பெருகியது. தாம் மட்டும் வெற்றிபெறவேண்டும் என்று எண்ணாமல் தனது ஜூனியர்களையும் திறமையான வக்கீல்களாக உருவாக்க எண்ணம் கொண்டு அவர்களுக்குச் சிறந்த பயிற்சி அளித்து வந்தார். தனது ஜூனியர்களைத் தம் குடும்பத்தினராகவே கருதி அனைவரையும் அன்புடன் வழி நடத்திவந்தார்.



 

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரப் பங்கு

ஐயர் சென்னை மாநிலக்கல்லூரியில் BA பயின்றுவரும் காலத்தில் நாடெங்கும் பரவியிருந்த மக்களின் தேசப் பற்று ஐயரையும் தட்டியெழுப்பியது. தேசியத் தலைவர்களின் பேச்சுக்களும், கட்டுரைகளும் பத்திரிகைகளின் வாயிலாக அறிந்த செய்திகளும், ஐயரை மேலும் தேசீயத்தில் தீவிரமாகத் தலைப்படுத்தியது.

ஒரு நாள் ஐயர் சென்னைக் கடற்கரையில், தேசத்தலைவர் பிபின் சந்திரபால் ஆற்றிய உரையினைக் கேட்க வழக்கம் போல் கூட்டத்திற்கு சென்று வந்தார். இதை அறிந்த கல்லூரியின் ஆங்கிலேய முதல்வர் இரண்டு வாரகாலம் அவரை தினமும் காலை முதல் மாலையில் வகுப்பு முடியும் வரை வகுப்பறை பெஞ்ச் மீது நிற்க வைத்தார்.ஐயரோ அத்தண்டனையை இன்முகத்துடன் ஏற்றவாறே வகுப்பில் நடைபெறும் பாடங்களைக் கவனித்துப் படித்து வந்தார்.

சுதந்திரப் போராட்டம் தோன்றிய காலந்தொட்டே ஒப்பற்ற பல தலைவர்கள் மதுரை மாநகரில் தேசிய இயக்கத்தை வளர்த்து வந்தனர். மகாத்மா காந்தியடிகள் 1919-ம் ஆண்டு மதுரைக்கு வருகை புரிந்தார், 1921-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் நாள் இரண்டாம் முறையாக அங்கு வந்த போது காந்தியடிகள் அரையாடை அணிந்து புரட்சியை உருவாக்கினார். பின்னர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையால் வெகுவாகக் கவரப்பட்ட இளைஞர்கள் பலர் பின்னாளில் மிகப்பெரிய தலைவர்களாகவும், சமூக சேவகர்களாகவும் விளங்கினார். அவர்களில் நமது ஐயரும் குறிப்பிடத்தக்க ஒருவர்.

1920-ம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்த வேளையில் ஐயர் நல்ல வருவாயை ஈட்டித் தரும் வக்கீல் தொழிலைக் கைவிட்டு இந்திய தேசிய காங்கிரசில் தம்மை முழுநேர ஊழியராக ஈடுபடுத்திக் கொள்ளவிரும்பினார். இச்சூழலில் காந்தியடிகளைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சித்தரஞ்சன் தாஸ்,“நீங்கள் வக்கீல் தொழிலைத் தொடர்ந்தவாரே பகுதிநேர ஊழியராகப் பணியாற்றினால் நூற்றுக்கணக்கான ஊழியர்களை உருவாக்கவும், அவர்கள் தேசிய இயக்கத்தில் செவ்வனே தொண்டாற்ற உதவி புரிய முடியும். எனவே, வக்கீல் தொழிலைக் கைவிடவேண்டாம்” என்று கூறினார். அன்று தொட்டு ஐயர் வக்கீல் தொழிலைத் தொடர்ந்தபடியே அரசியல் பணியிலும், சமூக சேவையிலும் தொண்டாற்றி வந்தார்.

ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடர்ந்து தொண்டர்கள் கதர், மது விலக்கு, இந்து முஸ்லீம் ஒற்றுமை, ஹரிஜனத் தொண்டு முதலிய நிர்மாணப் பணிகளில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று காந்தியடிகள் கேட்டுக் கொண்டார். அதன்படி மதுரையில் கதர் பிரச்சாரம் தொடங்கியது. ஐயர், மதுரை மட்டுமன்றி அம்மாவட்டத்தின் கிராமங்களிலும் இராட்டையை அறிமுகப்படுத்தினார். கிராமந்தோறும் சென்று கதரின் மேன்மையை மக்களுக்கு பிரச்சாரம் செய்து கதர் உற்பத்தி செய்ய வழிகாட்டினார். இளைஞர்கள் துணையுடன் தனது தோளில் கதர் ஜவுளி சுமந்து விற்பனையிலும் ஈடுபட்டார். இதன் பயனாக 1924-ம் ஆண்டு தமிழகத்திலேயே மதுரை, கதர் உற்பத்தியிலும், விற்பனையிலும் முன்னிலை வகித்தது. கதர் பிரச்சாரத்தின்போது பல இன்னல்களையும், இடையூறுகளையும் சந்தித்தார், எனினும் அவர் தாம் மேற்கொண்ட பணியினை அயராது செய்து வந்தார்.

அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த Dr.S.வரதராஜுலு நாயுடு கதர் உற்பத்தியில் முதலிடம் வகித்த மதுரைக்குக் கட்சியிலிருந்து மிகவும் கௌரவமானதாகக் கருதப்பட்ட வெள்ளி இராட்டினம் ஒன்றைப் பரிசாக வழங்கினார். இதனை வாங்கிக் கொடுத்த பெருமை நமது ஐயர் அவர்களையே சாரும்.

கதர்ப் பணி நடைபெறும்போதே, கிராமங்கள் தோறும் கல்வியைப் பரப்புதல், தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றையும் ஐயர் தமது தலைமையில் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் செவ்வனே செய்து வந்தார். ஹரிஜன சேவக சங்கம்,போன்ற சமூக சீர்திருத்த இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்னமே ஹரிஜனங்களுக்காகப் போராடியவர் ஐயர் என்பது கண்கூடான ஒன்று.

1929 டிசம்பரில் பண்டித நேருவின் தலைமையில் லாகூரில் கூடிய காங்கிரசின் வருடாந்திர மாநாட்டில், பரிபூரண சுயராஜ்யம் அடைவதே காங்கிரசின் முதன்மையான இலட்சியம் என்று தீர்மானம் இயற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து காந்தியடிகளுக்கும் ஆங்கிலேய அரசுக்குமிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. காந்தியடிகள் உப்புச் சட்டத்தை ரத்து செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதனை ஆங்கில அரசு ஏற்க மறுத்தது. இதன் விளைவாக காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகம் நடத்தத் திட்டமிட்டார். அதன்படி சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டிக்கு யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.

இத்திட்டத்தினைத் தென்னிந்தியாவி்ல் செயல்படுத்துவது பற்றி இராஜாஜி மதுரை வந்து ஐயரிடம் ஆலோசனை செய்தார். ஆலோசனையின் முடிவில், தென்னகத்தில் திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை யாத்திரை சென்று அங்கு உப்புக் காய்ச்சுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதனைத் திட்டமிட்டு முடிவு செய்தவர் ஐயர் என்பது குறிப்பிடத்தக்கது. தண்டியாத்திரையின் முடிவில் உப்புச் சட்டத்தை மீறியதற்காக பிரிட்டிஷ் அரசு காந்தியடிகளைக் கைதுசெய்து ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கியது. 1930 ஏப்ரல் 13ம் நாள் திருச்சியில் தொடங்கிய வேதாரண்ய யாத்திரை ஆங்கிலேய அரசின் இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் அஞ்சாமல் அயராமல் 15 நாட்கள் கழித்து வேதாரண்யம் அடைந்தது.இராஜாஜி அங்கு உப்பு எடுத்தபோது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். நாடெங்கும் 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இராஜாஜியின் வேண்டுகோளின்படி ஐயர் யாத்திரையில் கலந்து கொள்ளாமல் ஒரு பார்வையாளராக இராஜாஜியுடன் சென்றார். இராஜாஜி கைது செய்யப்பட்டதும் ஐயர் உட்பட பிற தலைவர்களின் தலைமையில் தடைச்சட்டத்தையும் மீறி உப்பு சத்தியாகிரகம் வீறுகொண்டு எழுச்சியுடன் நடைபெற்றது. இதில் ஐயரின் பங்கு போற்றத்தக்கது.

ஒரு கூட்டத்தில் ஐயர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் திடீரெனப் போலீசார் புகுந்து புளியவிளாரால் அடித்துக் கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். உரையாற்றிக் கொண்டிருந்த ஐயரையும் புளியவிளாரால் போலீசார் அடித்து கடுமையாகத் தாக்கிக் கீழே தள்ளி ஒரு பர்லாங் தூரம் தரையில் இழுத்துச் சென்றனர். பின்னர் லாரியில் ஏற்றித் திருச்சிக்குக் கொண்டு சென்று ஆறுமாத கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தனர். 1931ம் ஆண்டு காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னரே ஐயர் விடுதலை செய்யப்பட்டார்.

1932-ல் காந்தியடிகள் சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்தார். அதனைப் பின்பற்றி மதுரையில் கள்ளுக்கடை மறியல், அந்நிய நாட்டுப் பொருட்கள் மறுப்பு போன்றவை ஐயர் தலைமையில் தீவிரமாக நடைபெற்றன. இதற்கு ஏற்பட்ட செலவுகள் அனைத்துக்கும் தமது வக்கீல் தொழில் மூலம் கிடைத்த வருமானத்திலிருந்து வாரிக் கொடுத்தார். நாடெங்கும் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்திக்கொண்டிருந்த காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். நீதி மன்றம் அன்னலுக்குச் சிறைத் தண்டனை வழங்கியது.

இதனைக் கண்டித்து மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஐயர் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில் போலீசார் திடீரெனத் தோன்றி 144 தடையுத்தரவைப் படித்தனர். இதனை வன்மையாகக் கண்டித்த ஐயர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் ஐயருக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதித்தது. வேலூர் சிறையில் ஐயர் அடைக்கப்பட்டார். 500 ரூபாய் அபராதத் தொகையை வசூலிக்கப் போலீசார் ஐயரின் காரைக் கைப்பற்றி ஏலம் விட்டனர். ஆனால், பொதுமக்கள் ஒருவரும் அதை ஏலம் எடுக்க முன்வரவில்லை. இது பொதுமக்கள் ஐயரின்பால் கொண்டிருந்த நன்மதிப்பிற்குச் சான்றாக விளங்குகிறது.

சட்ட மறுப்பு இயக்கத்தை தொடர்ந்து நடத்தப் போதிய பணம் மதுரை காங்கிரஸ் கமிட்டியிடம் இல்லை என்பதை அறிந்த ஐயர், தாம் வேலூர் சிறை செல்லும்முன் தமது நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் தமது வீட்டிலிருந்த நகைகளைக் கொடுத்து அவற்றை விற்றுப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் விரும்பியபடி நகைகள் விற்கப்படாமல் 7000 ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டன. அவற்றை ஐயர் விடுதலையானதும் தமது வருமானத்தின் மூலம் திருப்பினார்.

இரண்டாம் உலகப் போரின்போது நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்குலைவினால் கைத்தறித் தொழில் பெரிதும் பாதிப்படைந்தது. அத்தொழிலில் ஈடுபட்டிருந்த குடும்பங்கள் பெரிதும் வறுமையில் வாடின. அவர்களுக்கு ஐயர் தமது சுயவருமானத்தைக் கொண்டு உணவுப் பொருட்கள் வழங்கச் செய்தார். மற்றும் நோய் வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதியும் செய்து கொடுத்தார். அம்மக்களுக்கு அவர்தம் தொழிலில் இயல்பு நிலை திரும்பும் வரை தொடர்ந்து இவ்வுதவிகளை ஐயர் அன்புடன் செய்து வந்தார் என்பது போற்றுவதற்குரியது.

அதே வேளையில் முகமது அலி ஜின்னா போன்றவர்கள் விடுத்த முஸ்லீம்களுக்கான தனி நாடு கோரிக்கையினால் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்து-முஸ்லீம் கலவரம் ஏற்பட்டது. இந்து-முஸ்லீம் ஒன்றுமைக்காக ஐயர் ஆற்றிய தொண்டு அளப்பரியது.

1940-ல் பண்டித நேரு கைது செய்யப்பட்டு காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்டார். மதுரை மக்கள் வெகுண்டு எழுந்து பல போராட்டங்களையும் கடையடைப்பையும் நடத்தினர். அப்போது சில விஷமிகளால் பரப்பப்பட்ட வதந்திகளின் காரணமாகத் தெற்கு மாசி வீதியும், மேல மாசி வீதியும் சந்திக்கின்ற இடத்தில் இந்துக்கள் ஒருபுறமும், முஸ்லீம்கள் ஒருபுறமும் கொடிய ஆயுதங்களுடன் திரண்டிருந்தனர். அதனை அறிந்த ஐயர் உடனே அங்கு விரைந்து வந்து கூட்டத்தின் நடுவே சென்று இரு கைகளைக் கூப்பி தரையில் விழுந்து இருசாராரையும் சமாதானமாகச் செல்லும்படி வேண்டுகோள் விடுத்தார். இதனைக்கண்ட கூட்டத்தினர் அமைதியாகக் கலைந்து சென்றனர். ஐயரின் காந்தீயச் செயல்பாட்டினால் மிகப்பெரிய கலவரம் அங்கே தவிர்க்கப்பட்டது.

1940-ஆம் ஆண்டு பூனாவில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் தனி நபர் சத்தியாகிரகம் நடத்தவேண்டும் என காந்தியடிகள் கேட்டுக்கொண்டார். மதுரையில் தனிநபர் சத்தியாகிரகத்தை ஐயர் தமது தலைமையில் வழிநடத்தினார். தனிநபர் சத்தியாகிரகத்திற்கு சத்தியாகிரகிகளைத் தேர்ந்தெடுத்து, போராட்டத்திற்கு ஐயர் அனுப்பிவைத்தார். அதன்படி ஐயரின் துணைவியார் அகிலாண்டம்மாளும் சத்தியாகிரகியாக அனுப்பப்பட்டார். அகிலாண்டம்மாள் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்திய சுதந்திரப்போரின் உச்சகட்டமாக “வெள்ளையனே வெளியேறு” என்ற முழக்கத்தை 1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் நாள் பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் காந்தியடிகள் தொடங்கிவைத்தார். இதனைக் கேட்டு அதிர்ந்த ஆங்கிலேய அரசு, காந்தியடிகள் உள்ளிட்ட எல்லாத் தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது. தடையுத்தரவு நாடெங்கும் அமல்படுத்தப்பட்டது.

இதனையறிந்து கொதித்தெழுந்த ஐயர், தடையுத்தரவையும் மீறி 1942 ஆகஸ்ட் 9-ம் நாள் மதுரை திலகர் திடலில் பொதுக்கூட்டம் நடத்தினார். போலீசார் தடியடியுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தினார். இதில், பலர் தங்கள் இன்னுயிர் ஈந்தனர். பலர் பலத்த காயமடைந்தனர். ஐயர் கைது செய்யப்பட்டார். தடையுத்தரவை மீறியதாகவும், மக்களை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடத் தூண்டியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு அவர் அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

அலிப்புரம் சிறையில் இருந்தபோது ஐயரின் மூத்த மகன் சுந்தரராஜன் திடீரெனக் காலமானார். இச்செய்தி மிகவும் தாமதமாக ஐயருக்கு கிடைத்தது. இரண்டு வாரம் கழித்து பரோலில் வெளியே வந்து மூத்த மகனுக்கான எல்லாச் சடங்குகளையும் செய்து முடித்தார். அதே பரோல் காலத்திலேயே தனது மூத்த மகள் சுலோசனாவின் திருமணத்தையும் நடத்தி முடித்து விட்டு மீண்டும் அலிப்புரம் சிறைக்குச் சென்றார்.

ஆறு மாதகாலம் அலிப்புரம் சிறையிலிருந்து தண்டனைக் காலம் முடிந்து விடுதலை ஆனதும் சிறைவாசலிலேயே ஐயர் கைது செய்யப்பட்டு பாதுகாப்புக் கைதியாக தஞ்சாவூர் சிறைக்கும் பின்பு வேலூர் சிறைக்கும் மாற்றப்பட்டார். 1945-ல் பொது விடுதலையின் போது இவரும் விடுதலை பெற்றார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் தமது வக்கீல் தொழிலைத் தொடர்ந்து மேற்கொண்டார்.

தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பணி ஆற்றிவந்தார். காந்தியடிகளின் எண்ணம் போலவே ஐயர் அவர்களும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் என்று ஒரு தனி நாடு பிரிந்து செல்வதை விரும்பவில்லை. எனினும், காலச்சூழல் பாரத நாட்டை இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாகப் பிரித்தது. அனைவரும் வேண்டியதும் மகிழ்ந்து போற்றக்கூடியதுமான சுதந்திரம் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் அன்று பிறந்தது. ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடியும், பள்ளுப்பாடியும், நாடெங்கும் சுதந்திரம் கொண்டாடப் பட்டாலும், காந்தியடிகளுக்கும் நமது வைத்தியநாத ஐயருக்கும் ஐயரைப் போன்ற காந்தியவாதிகளுக்கும் மகிழ்ச்சியின் மறுபக்கத்தில் நாடு இரண்டானதின் வருத்தம் இழையோடியது என்பதே நிதர்சனம்.



 

ஆலயப்பிரவேசம்

ஐயர் சுதந்திரப் போராட்டத்தில் மட்டுமன்றி, சமுதாய ஒற்றுமைக்கும், ஹரிஜனங்களின் உரிமைக்காகவும் ஒப்பற்ற தொண்டாற்றியதில் தலைசிறந்தவர் என்பதற்கு அவர் நடத்திய ஆலயப்பிரவேசம் மிகச் சிறந்த சான்றாகும். 1932-ம் ஆண்டு, காந்தியடிகளுக்கும், டாக்டர் அம்பேத்காருக்கும் இடையே பூனா ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, ஹரிஜனங்களின் சமூக உரிமைக்காக நாடெங்கும் ஆலயப்பிரவேசப் பிரச்சாரங்களும், மாநாடுகளும், பொதுக் கூட்டங்களும் எழுச்சியுடன் நடைபெற்றுவந்தன.

இந்நிலையில், திருவாங்கூர் சமஸ்தானத்து மகாராஜா தமது சமஸ்தானத்திலிருந்து தீண்டாமையை ஒழிக்க விரும்பினார். 1935-ம் ஆண்டு நவம்பர் 12-ம் நாள் முதல் தமது சமஸ்தானத்திற்கு உட்பட்ட அனைத்து இந்துக் கோயில்களும் ஹரிஜனங்களுக்காகத் திறந்து விடப்படுகின்றன என்று ஆணை வெளியிட்டார். அங்கிருந்த ஹரிஜனங்கள் எந்தவித அச்சமும் இன்றி சுதந்திரமாக இந்து ஆலயங்களுக்குச் சென்று வழிபடலாயினர். அங்கு தீண்டாமை ஒழிக்கப்பட்டது. இச்செய்தி வைத்தியநாத ஐயருக்கு தேன்சுவையாய் இனித்தது. அவருக்குப் புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. தமிழகத்திலும் இதுபோன்று ஆலயப் பிரவேசத்தினை உடனே நடத்த எழுச்சியுடன் புறப்பட்டார். தொடர்ந்து ஆலயப் பிரவேச மாநாடுகளையும் கூட்டங்களையும் எங்கும் நடத்தினார்.

மதுரையில் ஆலயப் பிரவேசம் நடத்த ஐயருடன் எம்.என்.ஆர் சுப்புராமன், டாக்டர்.ஜி.ராமச்சந்திரன், சோமசுந்தரபாரதி, மணக்கால் பட்டாபிராமய்யர், சோழவந்தான் சின்னசாமிப்பிள்ளை, மட்டப்பாறை வெங்கட்ராமய்யர் போன்றவர்களும் தீவிரமாகச் செயலாற்றி வந்தனர்.

1939-ம் ஆண்டு ஜூன் மாதம் மதுரையில் ஆலயப் பிரவேச மாநாடு நடைபெற்றது. அப்போது "ஆலயப் பிரவேசம் நடத்தியே தீருவோம்” என்று வைத்தியநாத ஐயர் முழங்கினார். இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் முழுவதும் மதுரையெங்கும் ஆலயப் பிரவேசத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கூட்டங்கள் நடந்து வந்தன.

ஆலயப் பிரவேசத்திற்கு மீனாட்சியம்மன் கோயில் அறங்காவல் குழுத்தலைவர் ஆர்.எஸ்.நாயுடுவும் அவரது குழுவினரும் ஆதரவு தந்தனர். இந்நிலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாளாக 1939 ஜூலை மாதம் 8-ம் நாள் விடிந்தது. அன்று நமது ஐயர் காலையில் எழுந்து நீராடி நீறுபூசி ஆறு ஹரிஜன்களை தன்னுடன்த் அழைத்துக் கொண்டு மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றார். கோயிலின் வாசலில் ஆர்.எஸ்.நாயுடு அவர்கள் அனைவருக்கும் மரியாதை செய்து கருவறைக்கு அழைத்துச் சென்று வழிபாடு செய்யவும் பூசைகள் நடத்தவும் உதவினார். பின்னர் வெளியே வந்ததும் ஐயர் பொதுமக்களிடம் ஆலயப் பிரவேசம் நடந்து விட்டதாக அறிவித்தார்.

இதைக் கண்டு வெகுண்டு எழுந்த வைதீகர்கள், நடேசய்யர் தலைமையில் கூடி, ஐயரையும் அவரது குடும்பத்தினரையும் சாதி விலக்கம் செய்து விட்டதாக அறிவித்தனர். தொடர்ந்து அவர்கள் கோயிலில் மீனாட்சியம்மன் இல்லை என்றும் அம்மன் வெளியேறி நடேசய்யர் வீட்டில் குடியேறிவிட்டதாகவும் கூறி அவர் வீட்டில் ஒருசிலையை வைத்து வழிபடலாயினர்.

ஆலயப்பிரவேசம் ஒரு சமூகப் பிரச்சனையைப் பெரிதாகக் கிளறி விட்டுவிடும் என்பதை அறிந்திருந்த அப்போதைய சென்னை மாகாணத்தின் முதன் மந்திரி மூதறிஞர் இராஜாஜி, அவசரச்சட்டம் ஒன்றை கவர்னர் மூலமாகப் பிறப்பித்தார். பின்னர் சட்டமன்றம் கூடியவுடன் செப்டம்பர் மாதம் 1939-ம் ஆண்டு அதனை சட்டமன்றத்தில் சட்டமாக இயற்றி ஆலயப் பிரவேசத்தினைச் சட்ட் பூர்வமாக அங்கீகரித்தார்.

மீனாட்சியம்மன் ஆலயத்தைத் தொடர்ந்து அழகர் கோயில், திருப்பரங்குன்றம், திருவரங்கம், பழனி, திருவில்லிப்புத்தூர் போன்ற தமிழகத்தின் முக்கிய தலங்கள் அனைத்திலும் 1939-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ஆலயப்பிரவேசம் நடந்தேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலயப் பிரவேசம் வெற்றிகரமாக நடந்தேற ஐயருக்கு இராஜாஜி உறுதுணையாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

தீண்டாமை ஒழிப்புப் பணியில் ஐயர் ஆற்றிய ஆலயப் பிரவேசம் என்றும் நன்றியுடன் எண்ணிப்பார்க்க வேண்டிய, மற்றும் போற்றுதற்கு உரிய ஒன்றாகும்.



 

சட்டமன்றப் பணி

காந்திஜி, சர்தார் பட்டேல் மற்றும் இராஜாஜி போன்ற தேசியத்தலைவர்களின் வற்புறுத்தல்களால் வைத்தியநாத ஐயர் 1946-ல் சட்டமன்ற தேர்தலில் மதுரை – மேலூர் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். பதவியை விரும்பாத இவர், கட்சி தனக்கு அமைச்சர் பதவி வழங்க முன்வந்த போதும், அதை ஏற்க மறுத்துவிட்டார்.

சிறப்பான சட்டப்புலமையைக் கொண்டிருந்த இவரின் சட்ட மன்ற உரைகள் அனைவராலும் கவனமாகக் கேட்கப்பட்டன. ஆலயப் பிரவேசம், ஹரிஜன மக்களின் நல்வாழ்வு, இந்தியாவின் புதிய அரசமைப்பு சாசனம், கல்வி மற்றும் பெண்கள் நலன் எனப் பல்வேறு பொருட்களிலும், மற்றும் சட்டமசோதாக்கள் பற்றியும் இவரது அற்புதமான, அறிவார்ந்த கருத்துக்கள், இவரது நேர்மையையும், மக்கள் நலன் மீது இவர் கொண்டிருந்த அக்கறையையும் வெளிப்படுத்தின. மசோதாக்கள் மீது இவர் கொண்டு வந்த திருத்தங்களும் பல முறை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராகவும் சீரிய பணியாற்றிய இவர், சட்டமன்றத்தில் ஹரிஜன நல கமிட்டியின் அறிக்கை மீது ஆற்றிய உரையானது, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

வைத்தியநாத ஐயர் ஆற்றிய சட்டமன்ற உரைகள் அனைத்தும் முனைவர் பி.எஸ். சந்திரபிரபு (P.S. CHANDRAPRABU) அவர்களால் தொகுக்கப்பட்டு "VOICE OF A GREAT SOUL" என்ற புத்தக வடிவில் மதுரை, காந்தி மெமோரியல் மியூசியத்தால் வெளியிடப்பட்டது.



 

உபசரிப்பும் உதவிகளும்

விருந்தினர் விடுதிகள் அதிகம் கட்டப்படாத அக்காலத்தில் காங்கிரஸ் பெருந்தலைவர்கள் மதுரைக்கு வந்தால், வைத்தியநாதய்யர் வீட்டில் தங்குவார்கள். பாபு ராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல், வி.ஜே.பட்டேல், கமலாதேவி சட்டோபாத்யாயா, மதன் மோகன் மாளவியா, ஜமன்லால் பஜாஜ் போன்ற தலைவர்கள் வைத்தியநாதய்யர் வீட்டில் தங்கி இருக்கிறார்கள்.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரப் பங்காற்றிய பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோஸப் அவர்கள் மதுரைச் சிறையிலிருந்து விடுதலையடைந்தபோது அவரை வரவேற்று அழைத்து வர யாருமில்லை. இதனைக் கேள்விப்பட்டு ஐயர் ஓடினார். ஜார்ஜ் ஜோஸப் அவர்களை வரவேற்று, வீட்டிற்கு அழைத்து வந்து கதராடை அளித்து, உபசரித்து ஊருக்குச் (கேரளத்துக்குச்) செல்ல ஏற்பாடுகளும் செய்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரப் பங்காற்றிய துர்க்காபாய் (பின்னர் துர்க்காபாய் தேஷ்முக்) அவர்கள் மதுரைச் சிறையிலிருந்து விடுதலையான போது, சிறைவாசலுக்குச் சென்று ஐயர் அவரை வரவேற்றார். வீட்டில் உபசரித்து, கதராடைகள் வழங்கி ஊருக்குச் செல்ல உதவிகளையும் செய்தார்.

வைகையாற்றில் வெள்ளம் வந்தபோதும், தைக்காலில் தீப்பிடித்த போதும் தொண்டர்களுடன் ஓடோடிச் சென்று நிவாரணப்பணிகளைச் செய்தார்.

கருப்பையா பாரதி என்ற தேசியத் தொண்டர் படுகொலை செய்யப்பட்ட போது அவரின் தாயார் கருப்பாயி அம்மாளுக்கும், சகோதரர் கந்தன் குடும்பத்திற்கும், ஊரில் வசூல் செய்து, அந்தப் பணத்தில் வீடு வாங்கிக் கொடுத்தார்.

ஈ.வே.ரா. பெரியாரை பாதுகாத்தார்

1946-ல் வைகை வடகரையில் திராவிடக் கழக மாநாடு நடைபெற்றது, சில தி.க.தொண்டர்கள் மீனாட்சியம்மன் கோவிலுக்குள் சென்று கடவுள் சிலைகளைப்பற்றிக் கிண்டலும் கேலியுமாகப் பேசினார்கள். தகவலைக்கேட்ட மதுரை மக்கள் ஆவேசமாக எழுந்து தி.க. தொண்டர்களை மாநாட்டுப் பந்தல் வரை விரட்டிச் சென்றதோடு மாநாட்டுப் பந்தலுக்கும் தீ வைத்து விட்டார்கள்.

அப்போது ஷெனாய் நகரில் தங்கியிருந்த மாநாட்டுத் தலைவரான ஈ.வே.ரா. பெரியார் அவர்களையும் மக்கள் சூழ்ந்து விட்டார்கள். போலீசாராலும் தடுக்க முடியவில்லை.

தகவல் அறிந்த ஐயர், அங்கு விரைந்து சென்று, நடுவில் நின்று பொதுமக்களைத் தடுத்து நிறுத்தி அமைதிப்படுத்தினார். பெரியார் அவர்களையும் ஏனைய தி.க. தலைவர்களையும் பத்திரமாக ஊருக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தார்.

 

பலரின் வாழ்வைச் சீரமைத்த ஐயர்

திருமணத்தின்போது ஐயருக்கு வயது 18, மனைவி அகிலாண்டத்திற்கு வயது 9, சுமார் 12 ஆண்டுகள் அதாவது அகிலாண்டம் 21 வயது ஆகும்வரை, குழந்தையே பிறக்கவில்லை, அப்போதெல்லாம் வைத்தியநாத ஐயர் நல்ல வருமானம் வந்து கொண்டிருந்த வக்கீலாகத் திகழ்ந்தார். அவருடைய உறவினர்கள், அவருக்குக் குழந்தை இல்லாததால் அவர் மறுமணம் செய்துகொள்ள ஆசைவார்த்தைகளுடன் தங்களின் பெண்களைக் கொடுக்க முன்வந்தனர். ஆனால் அவர், “திருமணத்திற்குப் பின் ஒரு பெண்ணுக்குக் கணவன் தான் ஆதரவு. ஆண்டவனின் நியதிப்படி, என்ன குறைகள் இருத்தாலும் கணவர் அன்று பிடித்த மனைவியின் கையை இறுதிவரை கைவிடலாகாது” என்று பதிலளித்து மறுமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.

ஆண்டவன் அருளால், ஐயர் தம்பதிக்கு சுந்தரராஜன், சங்கரன், சதாசிவன் என்ற மூன்று புத்திரர்களும், சுலோசனா, சாவித்திரி என்ற 2 புத்திரிகளும் பிறந்தனர்.

குடும்பங்களில், குறிப்பாகத் தம்பதிகள் இடையே வேற்றுமைகள் தோன்றி வளராதவாறு, அவர்களுக்கு ஐயர் நல்லுரைகளும், நல்ல எடுத்துக்காட்டுகளும் எடுத்துரைத்து ஒன்றாக, ஒற்றுமையுடன் வாழுவதற்கு நல்வகை செய்வார்.

பெற்றோர்களின் சில மனவேற்றுமைகளால் இளம் தம்பதிகளின் வாழ்க்கை சின்னா-பின்னப்பட்டுபோகிறது. தம்பதிகளுக்கு ஓரிரு குழந்தைகள் பிறந்து விட்டால் குழந்தைகள் மூலம் பந்தமும் பிணைப்பும் தானாக உண்டாகிவிடும். மாறுபாடு மறைந்துவிடும் என்று ஐயர் கருதினார். இதை எடுத்துக் கூறிப் பல குடும்பங்களில் ஒற்றுமையை உருவாக்கினார்.

ஐயர் அவர்கள், தான் சம்பாதிக்க தொடங்கியது முதல்,யாராவது ஒரு பையனோ, பெண்ணோ, தான் படிப்பதற்கும் புத்தகம் வாங்குவதற்கும் சக்தியில்லை என்று சொன்னால் அந்த நிமிடமே அதை வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்து விடுவார் (அதுவும் கண்ணீருடன்). “அந்தக்கஷ்டம் எனக்குத்தான் தெரியும்” என்று சில சமயங்களில் வெளியிட்டதும் உண்டு. இந்தப் பழக்கம் நாளடைவில் விரிந்து பல துறைகளிலும் பரிணமித்தது. கதரிடம் ஐயர் கொண்ட ஆர்வத்தால் தன்னை அண்டி வரும் கதர் அன்பர்கள் தமக்குக் கதர் ஆடை வாங்கச் சக்தியில்லை என்று சொன்ன உடனேயே கதர்க் கடைக்கு உடனே ஒரு சீட்டு அனுப்பி அவர்களுக்குக் கதர் ஆடை வழங்குமாறு செய்வார்.

தொகுதி மக்களுக்கு ஆற்றிய பணி

1946-ம் ஆண்டு முதல் 1951-ம் ஆண்டு வரை மேலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக விளங்கிய ஐயர் அத்தொகுதிக்குப் பல நன்மைகளைச் செய்தார். மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தார். அப்பகுதியில் அவ்வப்போது ஏற்பட்டு வந்த பிளேக் மற்றும் காலரா நோயை முற்றிலுமாக நீக்குவதில் அதிகக் கவனம் செலுத்தி, அந்தத் தொகுதி முழுவதும் பல சுகாதார மையங்களை ஏற்படுத்தினார். பல கிராமங்களில் புதிதாகப் பள்ளிக்கூடங்களைக் கட்டித் தந்தார். குடி தண்ணீர் பிரச்சினையைப் போக்குவதற்காகத் தொகுதி முழுவதும் கிணறுகள் அமைத்துத் தந்தார்.

மேலூரில் ஒரு முறை கடுமையான வறட்சி நிலவியது. அப்போது ஐயர், தேக்கடி நீர்த்தேக்கத்திலிருந்து பல ராட்சதப் பம்புகள் மூலம் நீரை இறைத்து வைகை ஆற்றுக்குக் கொண்டுவந்து அதன் மூலம் அப்பகுதியின் வறட்சியைப் போக்கினார். இதன் மூலம் தக்க சமயத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புள்ள விவசாயப் பயிர்கள் பாதுகாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான கால்நடைகளும் காப்பாற்றப்பட்டன. இதன் காரணமாக அத்தொகுதி மக்கள் அனைவரும் ஐயர் மீது மிகுந்த அன்பு செலுத்த ஆரம்பித்தனர்.

ஐயரும் மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்து வைத்தார். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிவார். எளிமையான முறையில் மக்களுடன் கலந்து பழகுவார். இதனால் சாதாரண மக்கள் மத்தியிலும் ஐயர் மிகச் செல்வாக்கு உடையவராகத் திகழ்ந்தார்.

மேலூர் தொகுதியில் ஐயரின் வாக்கு வேதவாக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. எத்தகைய பிரச்சினையாக இருந்தாலும் சரி... ஐயரின் கருத்தினை மக்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். அதோடு அத்தொகுதி மக்கள், ஐயரை ஒரு சாதாரண மனிதராகப் பார்க்காமல் அவரை ஓர் உயர்ந்த இடத்தில் வைத்து, மக்கள் தொண்டராகப் பூசிக்க ஆரம்பித்தனர்.

 

இறுதிநாட்கள்

இந்நிலையில் 1952-ம் ஆண்டு மீண்டும் தேர்தல் வந்தபொழுது ஐயர் போட்டியிட விரும்பவில்லை.. நாட்டுக்கு உழைப்பதையே தனது பிறவிப்பயனாக செய்து வந்த ஐயர், தன் உடல் நிலையில் சிறிதும் அக்கறை கொண்டதில்லை. ஆனால் சுதந்திரப் போராட்டத்திலும், தாழ்த்தப்பட்டோர்களுக்கான முன்னேற்றப் பணிகளிலும், தொகுதி மக்கள் முன்னேற்றத்திலும் ஐயர் தம்மை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டதால் அவர் உடல் நிலை மிகவும் பலவீனமடைந்தது.

ஐயர் இப்படி அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்ற ஜாதிக் கொடுமைகளுக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் பலியாகிக் கொண்டிருந்தனர். தங்களுடைய வீடு வாசல்களை இழந்து தவித்துக் கொண்டிருந்தனர். அச்சமயங்களில் ஐயர் தமது உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் உடனுக்குடன் விரைந்து சென்று அவர்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார். தம்மிடம் எஞ்சியிருந்த சொத்துக்களையும், பொருட்களையும் விற்று அவர்களுக்கு உதவி வந்தார்.

கடைசியில் மருத்துவ உதவியாலும் பலன் ஏற்படாமல் 1955-ம் ஆண்டு பிப்ரவரி 23-ல் அவருடைய 65-வது வயதில் ஐயரை, அந்த அற்புதமான ஆத்மாவைக் காலதேவன் அரவணைத்துக் கொண்டான்.விஞ்ஞானத்திற்கு இறைவனை மீறுகின்ற சக்தி இல்லாததால் ஐயர் மீளா நித்திரையில் ஆழ்ந்தார்.

ஐயரின் பிரிவையடுத்து இனி தாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தாழ்த்தப்பட்டோர்கள் தவித்தனர். இராஜாஜி போன்ற அவருடைய உற்ற நண்பர்களும், ஏனைய காங்கிரஸ் தலைவர்களும் ஐயரின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர் வடித்தனர். ஐயரின் பிரிவுச் செய்தியைக் கேட்டு மதுரை நகரே குலுங்கி அழுதது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் ஐயரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மதுரையில் மக்கள் வந்து குவிந்தார்கள். கடைகளெல்லாம் மூடப்பட்டன. பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. நகரெங்கும் சோக முகத்துடன் மக்கள் வெள்ளம் கரை புரண்டது.

மக்கள் சேவையே மகேசன் சேவையாக, தன் உயிருள்ள வரை இந்திய நாட்டிற்கு உழைத்த தன்னலமற்ற தியாகியாக, அஞ்சா நெஞ்சராக, மனித நேயப் பண்பாளராக, மிகச் சிறந்த தேசபக்தராக, காந்தீயவாதியாக, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் பாதுகாவலராக, இந்திய சமுதாயத்தின் மறுமலர்ச்சியாளராக இப்படி பல பரிமாணங்களில் வாழ்ந்து தேசீயத்தையும் தெய்வீகத்தையும் காத்தவர் வைத்தியநாத ஐயர்.

தனக்கென்று இல்லாமல் பிறருக்காக வாழ்பவர்களால் தான் நாட்டிற்கு நல்ல தலைமையைக் கொடுக்க முடியும் என்பதற்குச் சான்றாகவும், இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் புருஷராகவும், என்றென்றும் ஐயர் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.



 

வைத்தியநாத ஐயரின் நினைவாஞ்சலி

தபால் தலை வெளியீடு:

வைத்தியநாத ஐயர் விடுதலைப் போராட்டத்தில் சிறப்பாகப் பங்கேற்றதற்தாகவும், ஹரிஜன மக்களின் நலனுக்காகவும் மற்றும் சமூக நலனுக்காகவும் இவர் ஆற்றிய தொண்டுகளைப் பாராட்டும் விதத்திலும் இந்திய அரசு, 19.12.1999 அன்று ஐயரின் புகைப்படம் அடங்கிய தபால் தலையை வெளியிட்டு அவரைச் சிறப்பித்தது.

வைத்தியநாத ஐயரின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பி. எஸ். சந்திர பிரபு எமுதி “ஹரிஐனத் தந்தை அமரர் அ. வைத்தியநாத அய்யர் - வாழ்க்கை வரலாறு” என்ற அழகிய புத்தகமாக வடிவமைத்திருக்கிறா்ர். அதனைத் 'தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கம்' 1991ல் பதிப்பித்துள்ளது. இத்த அரிய புத்தகத்தின் மறுபதிப்பு மார்ச் 2012ல் மீண்டும் வெளிவந்துள்ளது.

வைத்தியநாத ஐயரின் நினைவைப் போற்றுகின்ற திருவுருவச் சிலை

இவரது வாழ்க்கையையும், மறக்க முடியாத சமூக சேவையையும் என்றும் மதுரை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ளுமாறு இவரது திருவுருவச் சிலை மதுரையில், முக்கியமான இடத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டு, மறைந்த அரசியல் தலைவர் திரு.ம.பொ.சிவஞானம் அவர்களால் 26.08.1973 அன்று திறந்து வைக்கப்பட்டது. அன்னாரின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினத்தன்று சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

வைத்தியநாத ஐயரின் பெயர், மதுரையில் ஒரு சாலைக்கு வைக்கப்பட்டிருப்பது, இவரின் நினைவு மதுரை மக்கள் மனதில் என்றும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாக இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும், இவர் இவ்வுலகை விட்டு இறைவனடி சேர்ந்த நினைவு தினமான பிப்ரவரி மாதம் 23-ம் தேதியன்று, சென்னை தக்கர் பாபா பள்ளியிலும், மற்றும் மதுரையில் இவர் ஹரிஜன மக்களுக்காக தொடங்கிய சேவாலயத்திலும் சிறப்பான அஞ்சலி அனுசரிக்கப்படுகிறது.



 

அரிய படங்களின் தொகுப்பு

ஆதார விவரம்

A.V.ஐயரைப் பற்றிய புத்தகங்களும் மற்ற வெளியீடுகளும்

A.V.ஐயரின் குடும்பத்தினரிடம் சேகரித்த தகவல்கள்